மூளை மிளகு வறுவல்

மூளை மிளகு வறுவல்
தேவையான பொருட்கள் :
வேக வைக்க:
மூளை - இரண்டு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
வறுத்து பொடிக்க:
மிளகு - 12
சீரகம் - அரை தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - இரண்டு
ஏலம் - ஒன்று
சோம்பு - கால் தேக்கரண்டி
முழு தனியா - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1 1/2 தேகரண்டி
டால்டா - அரை தேக்கரண்டி
வறுத்த பொடி
கொத்தமல்லி தழை - சிறிது மேலே தூவ
செய்முறை:
1.மூளையை மேலே உள்ள மெல்லிய தோலை எடுத்து விட்டு கட் பண்ண வேண்டாம் குழையாமல் புளி வடிகட்டியில் போட்டு நான்கு தடவை கழுவி நீரை வடிகட்டவும்.
2.மூளையை மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு குக்கரில் கால் டம்ளர் தண்ணீர் விட்டு இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
3.பொடி செய்ய வேண்டிய பொருட்களை வெறும் தவ்வாவில் கருக விடாமல் வறுத்து ஆற வைத்து பொடி செய்யவும்.

தேங்காய் சாப்பாடு & ஆட்டு தலை கறி குழம்பு

தேங்காய் சாப்பாடு & ஆட்டு தலை கறி குழம்பு

தேவையான பொருட்கள் :

அரிசி - 1 கப்
தேங்காய் (துருவியது) - 1/2 கப்
தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்க்கும் குறைவாக (இனுக்கு )
பச்சை மிளகாய் - 2
வறமிளகாய் - 3
கருவேப்பிலை - 6
முந்திரி பருப்பு - 6
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. அரிசியை மூன்று முறை நன்றாக கழுவ வேண்டும். ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர்க்கு மேல் ஊற்ற வேண்டாம்.

2. குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்தால் போதும் சாப்பாடு நல்லா பொலபொல என உதிரியாக இருக்கும்.

3. வாணலியில் அரை ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி முந்திரி பருப்பையும் , உளுந்த பருப்பையும் தனி தனியா பொன் நிறம் வரும் வரைக்கும் வறுத்து தனியா எடுத்து வைத்துக்கொள்ளவும்.

4. இப்போது தேங்காய் எண்ணையை வாணலியில் ஊற்றி கடுகு , கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்

5. பிறகு பச்சை மிளகாய் , வறமிளகாய் , கருவேப்பிலை , பெருங்காய பொடி , உப்பு, எல்லாம் போட்டு ஒரு 10 செகண்ட் தாளித்து, துருவிய தேங்காய் , வறுத்து வைத்திருக்கும் முந்திரி, உளுந்த பருப்பையும் போட்டு நன்றாக கலந்து விடவும்

6. இப்போது சாதத்தை போட்டு இரண்டு முறை
கிளறிவிடவும்.

தேங்காய் சாப்பாடுகு நல்ல சைட் டிஷ்
ஆட்டு தலை கறி குழம்பு

தேவையான பொருட்கள்:

ஆட்டுத்தலை- 1
வெங்காயம் -மூன்று
தக்காளி -இரண்டு
இஞ்சி பூண்டு விழுது -இரண்டு ஸ்பூன்
கசகசா -ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் -ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் -4
கறிவேப்பிலை -ஒரு கொத்து
சோம்பு -ஒரு டீஸ்பூன்
லவங்கம் , கிராம்பு,பட்டை , மொக்கு -சிறிதளவு
மிளகாய் தூள் -5 டேபிள் ஸ்பூன் (அவரவர் காரத்தை பொறுத்து)
முந்திரி பருப்பு-50 கிராம்
உப்பு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்-ஒரு டீஸ்பூன்

செய்முறை:

1.ஆட்டு தலையை சுட்டு முடிகளை பொசுக்கி சுத்தம் செய்து வைத்திருக்கிற தலையை இரண்டாக வெட்டி தரச் சொல்லி வாங்கி வந்து சுத்தமாக கழுவி ஒரு பெரிய பாத்திரத்தில் தலை முழுகும் அளவு தண்ணீர் விட்டு சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.

2.இதற்கு நடுவில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும். கசகசா , தேங்காய் , முந்திரி பருப்பு ஆகியவற்றை அரைத்து வைத்துக்கொள்ளவும்.

3. ஆட்டுத் தலை நன்றாக வெந்ததும் இறக்கி சூடு ஆறியதும் எலும்பையும் கறியையும் தனி தனியாக எடுக்கவும். மிக சுலபாக வந்துவிடும். பின்பு தேவையான அளவில் கறியை துண்டுகள் போட்டுக்கொள்ளவும்.

4. அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, எண்ணை ஊற்றி லவங்கம், பிரிஞ்சி இல்லை , மொக்கு போட்டு வெடிக்க விட்டு பின் வெங்காயம் போட்டு வதக்கவும். சிறிது வதங்கியதும்.

5. தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் அதில் கறியை போட்டு அதில் மஞ்சள் தூள், சோம்பு, மிளகாய் தூள், உப்பு, எல்லாவற்றையும்போட்டு நன்றாக .கிளறி மூடி வைக்கவும்.

6. மசாலா வாசனை போனதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

7.குழம்பு நன்றாக கொதித்து வாசனை வந்தததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிண்டவும்.

8.பதினைந்து நிமிடம் கொதிக்க விட குழம்பு கெட்டியாக வரும். அந்நேரம் கறிவேப்பில்லை போட்டு இறக்கி வைக்கவும். சுவையான தலைக்கறி குழம்பு ரெடி.

கேரளா கானங்கெளுத்தி மீன் ப்ரை

கேரளா கானங்கெளுத்தி மீன் ப்ரை
தேவையானவை:
கானாங்ககெளுத்தி மீன் - அரை கிலோ
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
மிளகாய்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - அரை இஞ்ச் துண்டு
பூண்டு - மூன்று பல்
பச்சைமிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 6
கருவேப்பிலை - 5,6 இலைகள்
உப்பு தேவையான அளவு
தேங்காய் எண்ணை - வறுக்க
விருப்பபட்டால் சிறிதளவு சோம்பு சேர்க்கலாம்
செய்முறை:
மீனை சுத்தம் செய்து மேலே கீறி விடவும்.
மேலே சொன்ன எல்லா பொருடகளையும் (மீனை தவிர) நைசாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மசாலாவை மீனின் கீறல்களில் படும்மாறு மேலும், உள்ளும் தேய்க்கவும். பிறகு இதை அரை மணிநேரம் பிரிட்ஜில் அல்லது வெளியில் மசாலாவில ஊற வைக்கவும்.
ஃபிரையிங் பேனை தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் மீனை பொரித்து எடுக்கவும். எலுமிச்சை துண்டுகளை சேர்த்து பறிமாறவும்.
செய்து பார்த்து உங்கள் விமர்சனங்களை இங்கே தெரியப்படுத்தவும்.
வாரம் ஒருமுறை கானாங்கெளுத்தி மீன் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
மீன்களில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் மிகவும் ஆரோக்கியமானதாக பல கட்டுரைகளில் சால்மன் மீனைத் தான் சொல்லியிருப்பார்கள். ஆனால் அந்த சால்மன் மீனுக்கு இணையான சத்து இந்தியாவில் அதிகம் கிடைக்கும் கானாங்கெளுத்தியில் உள்ளது.
கானாங்கெளுத்தி மீனை குழம்பு, ப்ரை செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகம் உள்ளவர்கள், இந்த மீனை வாரம் ஒருமுறை உட்கொள்வது நல்லது.
இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், புரோட்டீன் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதனால் இது பல நன்மைகளை வாரி வழங்கும். இங்கு கானாங்கெளுத்தி மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதய நோய்கள் தடுக்கப்படும்
கானாங்கெளுத்தி மீனில் ஒமோக-3 ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளதால், இது இதய நோய்களைத் தடுக்கும். கானாங்கெளுத்தியில் மோனோ சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் மட்டுமின்றி, சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாக உள்ளது. எனவே இம்மீனை அடிக்கடி உட்கொண்டு வர, இதய பிரச்சனைகளான பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு, மாரடைப்பு போன்றவை வரும் வாய்ப்பு குறையும்.
நீரிழிவு நோய்
அபாயம் குறையும் கானாங்கெளுத்தி மீனில் வளமான அளவில் நல்ல கொழுப்புக்களான மோனோ-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் உள்ளன. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும் நீங்கள் அசைவ பிரியராக இருந்து, உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் கானாங்கெளுத்தி மீனை அடிக்கடி சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இச்சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.
மூட்டு பிரச்சனைகள்
கானாங்கெளுத்தியில் மூட்டு பிரச்சனைகளைத் தடுக்கும் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அடிக்கடி உட்கொண்டு வர, மூட்டு பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.
புலனுணர்வு செயல்பாட்டை அதிகரிக்கும்
ஆய்வில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் மக்கள் மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றால் கஷ்டப்படுவது குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இதில் உள்ள DHA அல்சைமர் அல்லது பர்கின்சன் நோயின் தாக்குதலைத் தடுக்கும்.
குடல் புற்றுநோய்
கானாங்கெளுத்தியில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் டி அதிகம் உள்ளது. இதனை புற்றுநோய் உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால், வாழ்நாளின் அளவை நீட்டிக்கலாம். ஆய்வு ஒன்றிலும் குடல் புற்றுநோயுடன் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் கானாங்கெளுத்தியை உட்கொண்டால், வாழும் நாளை அதிகரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது

முஸ்லீம் மட்டன் பிரியாணி

முஸ்லீம்கள் வீட்டு கல்யாண மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1.25 கிலோ
அரிசி – 1 கிலோ
எண்ணெய் – 100 கிராம்
டால்டா – 150 கிராம்
பட்டை – இரண்டு அங்குல துண்டு இரண்டு
கிராம்பு – ஐந்து
ஏலக்காய் – மூன்று
வெங்காயம் – 1/2 கிலோ
தக்காளி – 1/2 கிலோ
இஞ்சி – 3 டேபிள் ஸ்பூன் குவியலாக (அ) 150 கிராம்
பூண்டு – 2 டேபிள் ஸ்பூன் குவியலாக (அ) 100 கிராம்
கொத்தமல்லி தழை – ஒரு கட்டு
புதினா – 1/2 கட்டு
பச்சை மிளகாய் – 8
தயிர் – 225 கிராம்
சிவப்பு மிளகாய் தூள் – 3 1/2 டீஸ்பூன்
மஞ்சள் போடி – 1 பின்ச்
ரெட் கலர் பொடி – 1 பின்ச்
எலுமிச்சை பழம் – 1
நெய் – ஒரு டீஸ்பூன்

செய்முறை :

1.முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணெயும், டால்டாவையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் ஒரு விரல் அளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும்.

2.அது வெடித்ததும் நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி போடவும்.

3.நல்ல பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும்.

4.ஓவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியேதான் வைக்க வேண்டும்.

5.அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். பிறகு கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளறவும்.

6.அதன் பின் தக்காளி பச்சை மிளகாய் போடவும்.இரன்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேக விடவும்.

7.நன்கு எண்ணெயில் எல்லா பொருட்களும் வதங்கியவுடன் மட்டனை போடவும். போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக மூன்று நிமிடம் கிளறவும்.

8.பிறகு தயிரை நல்ல ஸ்பூனால் அடித்து ஊற்றவும்.அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேக விடவும். வெந்ததற்கு அடையாளம் எண்ணெய் மேலே மிதக்கும்.

9.அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும். ஊற வைத்த அரிசியை வடிக்கவும். உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணெயும், எலுமிச்சை பழமும் பிழியவும். வெந்ததும்

10.நல்ல பதமாக பார்த்து ஓவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடித்தால் போதும். உடனே சிம்மில் வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் கொட்டவும். கொட்டி சமப்படுத்தி சட்டிக்கு கீழே தம் போடும் கண் தட்டு (அல்லது) டின் மூடி வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு மேலே வடித்த கஞ்சி சட்டியை வைத்து தம்மில் விடவும்.

11.ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி விட்டு ரெட்கலர் பொடியை அந்த சுடு கஞ்சி இரண்டு டேபிள் ஸ்பூனில் கரைத்து தூவிவிடவும்.

12.அதன் பின் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும்.

13.பிறகு பத்து நிமிடம் புழுங்க விட்டு மேலிருந்து கீழாக நல்ல உடையாமல் பதமாக கிளறி சூடாக பரிமாறவும்.

கறி சாப்ஸ்

கறி சாப்ஸ்

தேவையான பொருட்கள் :

சாப்ஸ் கறி – 1/4 கிலோ (எலும்புடன் சேர்த்து பெரிய துண்டாக வாங்கவும்)
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
மல்லி – 1 மேஜைக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 8 (வெட்டியது)
தேங்காய் – 1 முடி
இஞ்சி – சிறியது
பூண்டு – 4 பல்
முந்திரிப்பருப்பு – 15
உப்பு, மஞ்சள்

செய்முறை:

1.பாதி தேங்காயில் பால் எடுக்கவும். மீதி தேங்காயை மேலே உள்ள மசாலா சாமான்களுடன் சேர்த்து அரைத்து இரண்டாவது பாலில் கலந்து கறியையும் போட்டு, உப்பு மஞ்சள் சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைக்கவும்.

2.பின் இரும்புச்சட்டியில் நெய் 2 கரண்டி நல்லெண்ணெய் 2 கரண்டி ஊற்றி, முந்திரிப்பருப்பு 9 பட்டை சிறிது கிராம்பு 3 ஏலக்காய் 3 போட்டு தாளித்து வெங்காயத்தை வதக்கி முதல் பாலையும் சேர்த்து ஊற்றி, குழம்பு வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கவும்.

மேட்டுப்பாளையம் மட்டன் குழம்பு

மேட்டுப்பாளையம் மட்டன் குழம்பு

ஸ்டேசனுக்கு முன் ஒரு ரெஸ்ட்ரோராண்ட் இருக்கு சாப்பிட்டு விட்டு ஊட்டிக்கு ரயில் ஏறலாம் .

தேவையான பொருட்கள்:

மட்டன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 3 ஸ்பூன்
சோம்பு - 1/2 டீ ஸ்பூன்
பட்டை, கிராம்பு கருவேப்பில்லை
தாளிக்க சிறிதளவு எண்ணெய் - 4 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைக்க தேவையானவை :

மிளகு - 3 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை:

1. கறியை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்த கறியை சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

2. 5 விசில் வரை விட்டால் கறி நன்றாக வெந்து விடும்.

3. ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி சேர்த்து அரைக்கவும்.

4. அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

5. இத்துடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய உடன் அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்கவும்.

6. சிறிது வதங்கிய பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதில் வேகவைத்த கறியைப் போட்டு நன்கு கொதிக்க விடவும்.

7. குழம்பு நன்றாக கொதித்து வற்றி எண்ணெய் மிதந்து வரும். இப்பொழுது ஸ்டவ்வை நிறுத்திவிடலாம். சுவையான மேட்டுப்பாளையம்மட்டன் குழம்பு தயார்.

விறால் மீன் குழம்பு

விறால் மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

விறால் மீன் (3/4 கிலோ எடையுள்ளது) - 1
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
தேங்காய்ப்பால் - 2 கப்
பூண்டு - 1
கடுகு - 1 டீ ஸ்பூன்
காய்ஞ்ச மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
எண்ணை - ஒரு குழிக்கரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு

செய்முறை:

🐟 மீனை நல்லாக்கழுவி துண்டுகள் போடுங்க.

🐟 குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணைவிட்டு கடுகு, காய்ஞ்ச மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வதக்குங்க.

🐟 வெங்காயம் போட்டு நல்லா வதக்கி, பூண்டு சேர்த்து வதக்குங்கள்.

🐟 அப்புறம் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்குங்கள். அதோடு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து கொத்துமல்லி கறிவேப்பிலை சேர்த்து தேங்காய்ப் பாலை ஊத்துங்க.

🐟 கொதிக்கறப்போ மீன் துண்டுகளைப் போட்டு ஒரு கொதிவிட்டு இறக்குங்க.

குறிப்பு: எப்போதுமே விறால் மீன் வாங்குறப்போ முக்கால் கிலோ அல்லது அதுக்கு மேல எடை இருக்கிற மாதிரி பார்த்து வாங்கணும். அதுக்கு கீழே எடை இருந்தா ருசியாகவே இருக்காது.

செலவு ரசம்

செலவு ரசம்

தேவையான பொருட்கள்:

பூண்டு – 7 பல்
பெரிய வெங்காயம் – 1 /4 – 1 / 2
சீரகம் – 3 / 4 தேக்கரண்டி
மிளகு – 10
வர கொத்தமல்லி – 1 1 / 2 தேக்கரண்டி
வர மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1 /4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 /4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிது
கடுகு – 1 /2 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

செய்முறை:

1.கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

2.வதக்கியவற்றுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

3.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து அரைத்ததை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.

4.ரசம் தண்ணியாக வைக்க ேண்டும்.விருப்பத்திற்கேற்ப தண்ணீர் அளவை மாற்றிக் கொள்ளலாம்.

5.ரசம் நுரைத்துப் பொங்கி வரும்போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.

குறிப்பு :

1.இந்த ரசம் சளிக்கு நல்ல மருந்தாகும்.

2.புளி, தக்காளி இல்லாமல் செய்யகூடிய வித்தியாசமான ரசம் இது.

முட்டை மசாலா ஆம்லேட்

முட்டை மசாலா ஆம்லேட்

தேவையான பொருட்கள்:

முட்டை – 2 (அடித்து நன்றாக கலக்கவும்)
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய பச்சை மிளகாய் – 1
பொடித்த மிளகு – 4 முதல் 5
உப்பு – தேவையான அளவு
சிக்கன் சால்ண - 4 மேசைக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

1.மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் நன்றாக கலக்கவும்.

2.ஒரு தோசை கல்லை சூடேற்றி, அதில் நன்றாக எண்ணெய் இடவும்.

3.கலக்கிய கலவையே தோசை கல்லில் ஊற்றி 5 நிமிடம் மிதமான சூட்டில் பொன் நிறமாக வரும் வரை சமைக்கவும். பிறகு மறுபுறம் திருப்பி பொன்னிறம் வரும் வரை சமைக்கவும்.

மீன் தலைக் கறி

 மீன் தலைக் கறி.

சிங்கப்பூரில் பிரபலமான 'மீன் தலைக் கறி’ (Fish Head Curry) உலகத்தில் வேறு எங்கு தேடினாலும் இந்த டிஷ் கிடைக்காது. அங்கு கிடைக்கின்ற மீனோட தலை ஒரு கிலோவிலிருந்மு ஆரம்பித்து இரண்டரை கிலோ வரைக்கும் இருக்கின்றது. தாரளமா ஒரு தலையை மூணிலிருந்மு இருந்து நான்கு பேர் சாப்பிடலாம்.

அட்டகாசமான டெக்கரேஷனுடன் அதை கொண்டு வந்து வைத்து ரைஸும் கொடுப்பார்கள். ஃபிஷ் தலைக்கறியில வெண்டைக்காய், கத்திரிக்காய் எல்லாம் போட்டு ஒரு கிரேவி மாதிரி இருக்கும். அதை ரைஸோட சேர்த்து சாப்பிட்டால், சொர்க்கத்துக்கே போன ஃபீல் கிடைக்கும்.

இந்த மீன் தலைக்கறி அந்த ஊரில் எப்படி செய்கிறார்கள் தெரியுமா? அவர்களிடம் நான் கேட்டு தெரிந்துகொண்ட மீன் தலைக்கறி ரெசிப்பி உங்களுக்காக இதோ.

தேவையானவை:

மீன் தலை - 1 கிலோ (வஞ்சிரம், கொடுவா போன்றவகை மீன்களில் பெரிய மீன்களின் தலையாக வாங்க வேண்டும்)

வெண்டைக்காய் - கால் கிலோ (முழுதாக போடவும்)

கத்திரிக்காய் -கால் கிலோ (இரண்டாக வெட்டவும்)

நாட்டுத்தக்காளி் கால் கிலோ (இரண்டாக வெட்டவும்)

சின்னவெங்காயம் - கால் கிலோ (உரித்துக்கொள்ளவும்)

புளி - 200 கிராம் (கரைக்கவும்)

மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) -4 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய்- 2 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வெல்லம் - சிறிதளவு

தாளிக்க:

கடுகு- 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை- சிறிது

செய்முறை:

மீன் தலையைக் கழுவி உப்பு, மஞ்சள்தூள் தடவி ஊற விடவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்த பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இதில் வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி, சின்னவெங்காயம் போட்டு வதக்கவும். இத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டுக் கிளறவும். புளிக்கரைசல் இதில் ஊற்றி, கூடவே 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். கலவை திக்காக வரும்போது, அதில் மீனைப் போடவும். மூன்று நிமிடம் கழித்து வெல்லம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். மீன் தலை 3 நிமிடம்தான் வேக வேண்டும். இட்லி, தோசை, சாதத்துக்கு அருமையான காம்பினேஷன் இந்தத் தலைக் கறி.

பருத்திப்பால் அல்வா

பருத்திப்பால் அல்வா

தேவையான பொருட்கள் :
பருத்தி விதை - 100 கிராம்
வெல்லம் - 75 கிராம்
சுக்கு - ஒரு துண்டு
மில்க்மெய்ட் - அரை கப்
கோவா - 100 கிராம்
நெய் - தேவையான அளவு

செய்முறை:

1.பருத்தி விதையுடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5 மணிநேரம் ஊற வைக்கவும்.

2.வெல்லத்தை துருவி வைக்கவும். சுக்கை பொடியாக்கவும்.

3.ஊறிய விதையை அலசி க்ரைண்டரில் போட்டு அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும்.

4.கடாயில் பருத்தி பாலை ஊற்றி மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு மடங்காக குறுகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

5.பருத்தி பால் கொதித்ததும் கோவா சேர்க்கவும்.

6.அதன் பின்னர் பாலுடன் மில்க் மெய்ட் சேர்த்து கலந்து விடவும்.

7.பிறகு பொடித்த வெல்லம் சேர்த்து கலந்து வரும் வரை சேர்த்து கிண்டி விட்டு சுக்கு பொடி போட்டு கிளறி விடவும்.

8.கலவை கெட்டியானதும் நெய் ஊற்றி இறக்கவும்.

முட்டை மசாலா ஆப்பம்

முட்டை மசாலா ஆப்பம்

தேவையான பொருட்கள் :

முட்டை - 2
பச்சரிசி - கால் கிலோ
புழுங்கல் அரிசி - கால் கிலோ
உளுத்தம் பருப்பு - 4 தேக்கரண்டி
கல் உப்பு - 2 தேக்கரண்டி
சோடா உப்பு - 4 சிட்டிகை
பச்சைமிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 4
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு கப்

செய்முறை :

1.பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு மூன்றையும் ஒன்றாகப் சேர்த்து 4 மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும்.

2.அத்துடன் வெந்தயம் போட்டு எல்லாவற்றையும் கழுவி ஆட்டுக்கல் அல்லது கிரைண்டரில் தோசை மாவு போல அரைக்கவும்.

3.அரைக்கும் போது தேங்காய் துருவல் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

4.அரைத்த மாவை மறுநாள் எடுத்து அத்துடன் சமையல் சோடா, மஞ்சள் தூள் போட்டு கலந்து வைக்கவும்.

5.இரண்டு முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக அடித்துக் கலக்கி மாவில் ஊற்றவும்.

6.பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், பெருஞ்சீரகம் இவற்றை அம்மியில் விழுதாக அரைத்து மாவில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து மாவை நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.

7.வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் தடவி விட்டு இரண்டு கரண்டி மாவை எடுத்து வட்டமாக ஊற்றி ஒரு மூடியால் மூடி விடவும்.

8.அடுப்பை நிதானமாக எரிய விட வேண்டும். ஒரு பக்கம் வெந்தால் போதுமானது. வெந்தவுடன் எடுத்து கோழிக்குழம்புடன் பரிமாறவும்.

புல்ஸ் ஐ ஆப்பம்

புல்ஸ் ஐ ஆப்பம்

தேவையான பொருட்கள் :

ஆப்பத்துக்கு
பச்சரிசி அரிசி – அரை டம்ளர்
புழுங்கல் அரிசி – அரை டம்ளர்
அவல் – ஒரு மேசை கரண்டி
ஜவ்வரிசி – ஒரு தேக்கரண்டி
உளுந்து – ஒரு மேசைகரண்டி
உப்பு – முக்கால் தேக்கரண்டி
ஆப்ப சோடா – கால் தேக்கரண்டி
தேங்காய் – நான்கு பத்தை துருவியது
வெந்தயம் – ஒரு அரை தேக்கரண்டி

புல்ஸ் ஐக்கு
முட்டை – 3
மிளகு தூள் - தேவைக்கு
உப்பு தூள் தேவைக்கு

செய்முறை:

1.முதலில் இருவகை அரிசி அவல் ,உளுந்து,ஜவ்வரிசி, வெந்தயத்தை முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.

2.தேங்காய் அனைத்தையும் சேர்த்து அரைத்து உப்பு சோடாமாவு போட்டு 8 மணி நேரம் புளிக்க விடவும்.

3.ஆப்ப ச்சட்டியை காயவைத்து வெங்காயத்தை பாதியாக அரிந்து ஃபோர்க்கில் குத்தி எண்ணை சிறிது விட்டு சுற்றிலும் தேய்க்கவும்.

4.அப்பதான் ஒட்டாமல் பிஞ்சி போகாமல் வரும்.
ஒரு குழிகரண்டி ஆப்பமாவை உற்றி சுழற்றி விடவும்.

5.ஒரு முட்டையை கலக்காமல் அப்படியே ஊற்றி மேலும் சிறியதாக சுழற்றிவிட்டால் வெள்ளை கருமட்டும் எல்லா மாவிலும் படும்.

6.பிறகு முடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்
நல்ல முக்கால் பாகம் வெந்து வரும் போது மிளகு உப்பு தூவி இரக்கவும்.

7.எண்ணையில்லதா முட்டையுடன் சத்தான டிபன், குழந்தைகளுக்கு காரமில்லாமல் சாப்பிட நல்லதொரு டிபன் அயிட்டம்.

தேவைக்கு இது போல் செய்து கொண்டு மீதிமாவில் பிளெயின் ஆப்பம் தேங்காய் பால் , சப்ஜி, சட்னியுடன் செய்து கொள்ளலாம்.

நாட்டு கோழி குழம்பு

 நாட்டு கோழி குழம்பு

நாட்டுக்கோழியின் ருசியே அலாதியானது. கிராமப் பகுதிகளில் கை, கால் உடைந்து கட்டுப் போட்டு படுத்திருப்பவர்களுக்கு நாட்டுக்கோழி அடித்து நல்லெண்ணெய் ஊற்றி சூப் குடிக்க கொடுப்பார்கள் அந்த அளவிற்கு சத்தானது நாட்டுக்கோழி.

நாவில் நீர் ஊறச் செய்யும் நாட்டுக்கோழியை சமைத்துப் பாருங்களேன்.

தேவையான பொருட்கள்:

நாட்டுக்கோழி – 1 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 3
தேங்காய் பால் – 1 கப்
மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன்
குழம்பு மசாலா தூள் – 3 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 6 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி
சோம்பு – 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
கறிவேப்பிலை – 1கொத்து
கொத்தமல்லி – சிறிதளவு
நல்லெண்ணெய் – 6
டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

மசாலா செய்முறை:

1.சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

2. தக்காளியை நறுக்கி வைக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

3.இத்துடன் பாதி அளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

4.வதங்கியதும் இத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து நன்றாக வதக்கவும். ஆறவைத்து மிக்ஸிசியில் மசாலாவாக நைசாக அரைக்கவும்.

செய்முறை:

1.நாட்டுக்கோழியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

3.இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். மஞ்சள் தூள், குழம்பு மசாலா சேர்த்து வதக்கவும்.

4.இதில் கோழியை சேர்த்து நன்றாக கிளறவும்.

5. அப்போது தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.

6.சிறிது நேரம் விசில் போடாமல் மூடி வைக்கவும்.

7.5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கிளறவும்.

8.இதனுடன் தேங்காய்பால் சேர்த்து குக்கரை மூடி போட்டு விசில் விடவும்.

9.நாட்டு கோழி என்பதால் 5 விசில் வரை விடலாம், அப்பொழுதுதான் நன்றாக வெந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

10.விசில் இறங்கின உடன் மல்லித்தழை தூவவும். காரசாரமான நாட்டுக்கோழி தயார்.

11.சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம். பிரியாணிக்கு ஏற்ற சைடு டிஸ் இது

பேச்சுலர் மீன் குழம்பு

பேச்சுலர் மீன் குழம்பு

பேச்சுலர்களும் எளிதாகும், விரைவாகும் சமைக்கக்கூடிய மீன் குழம்புதான் இந்த மீன் குழம்பு. ஆனால் இதுதான் ஒரிஜினல் கேரளா திருச்சூர் ஸ்டைல் மீன் குழம்பு.

தேவையானவை:

1/2 கிலோ மீன் - துண்டுகளாக்கியது
ஒரு பெரிய துண்டு இஞ்சி
6-7 சின்ன வெங்காயம்
3-4 பச்சைமிளாகாய் இரண்டாக கீறியது
2 டீஸ்பூன் மிளகாய் பவுடர் (காரம் குறைவாக தேவைப்படுவர்கள் குறைத்துக்கொள்ளலாம்)
1 டீஸ்பூன் மஞ்சள் பொடி
1/4 ஸ்பூன் வெந்தயப் பொடி
3 துண்டு குடம்புளி அல்லது அரை பச்சை மாங்காய் துண்டுகள் (குடம்புளியை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைக்கவும். இரண்டும் இல்லாதவர்கள் சாதாரண புளியை சேரத்துக் கொள்ளலாம்)
1 ஈர்க்கு கருவேப்பிலை
தேங்காய்பால் - 1 கப் (அவசரத்திற்க்கு தேங்காய்பால் பவுடர் அல்லது டின் தேங்காய்பாலும் உபயோகிக்கலாம்)

செய்முறை:

மண்சட்டியில் அல்லது ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை இடவும். இத்துடன் உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய் பொடி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் வெங்காயம், இஞ்சியை தட்டிப்போடவும் அல்லது சிறிதாக அரிந்தும் போடலாம். இத்துடன் அளவான தண்ணீர் மீன் முங்கும் அளவுக்கு ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கரண்டி உபயோகிக்க கூடாது. மண்சட்டி அல்லது பாத்திரத்தை எடுத்து லேசாக சுற்றி அடிபிடிக்காமல் இளக்கிவிட வேண்டும்.

மீன் வெந்தவுடன் தேங்காய்பாலை ஊற்றி சிறிது நேரம் சூடானவுடன் மேலாக வெந்தயப்பொடியை தூவி 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.

2-3 சின்ன வெங்காயத்தை வட்டமாக அரிந்து சிறிது தேங்காய் எண்ணையில் பொன்னிறமாக வரும் வரை தாளித்து மீன் குழம்பில் சேர்க்கவும்.

நல்ல மணமும், சுவையும் உள்ள மீன் குழம்பு ரெடி.

மீன் வட்டிச்சது

இது மற்றொரு மீன் சைடிஸ். மேலே சொன்ன அதே முறை. இத்துடன் சிறிய சைஸ் தக்காளியில் பாதியை சிறு துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ளவும். கருவேப்பிலையும், தேங்காய்ப்பாலும், வெந்தயப்பொடியும் வேண்டாம். மீன் வெந்தவுடன் மேலாக பச்சை தேங்காய் எண்ணெயை சிறிதளவு ஊற்றி மூடி விடவும். இதற்க்கு முக்கியமாக சிறிய வகை மீன்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

மூங்கிலில் சுட்ட கோழி

மூங்கிலில் சுட்ட கோழி

தேவையான பொருட்கள் :

நாட்டுக்கோழி - அரை கிலோ
மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
கொத்தமல்லி தூள் -2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைகரண்டி
உப்பு தேவையான அளவு
புதினா தலை 1 கைபிடி அளவு
கொத்தமல்லி இலை 1 கைபிடி அளவு
பச்சை மிளகாய் -3
நல்லெண்ணை தேவையான அளவு
பச்சை மூங்கில் குழாய்கள் -2 (வெட்டியது)
பலா இலை -10

செய்முறை :

1. நாட்டுகோழி, அனைத்து தூள்களும், சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா இலைகள் அனைத்தையும் நன்றாக கொத்தும் கத்தியை வைத்து பொடியாக கொத்தி கொள்ள வேண்டும்.

2. நல்லெண்ணை தெளித்து கொண்டு சன்னமாக அனைத்தையும் கொத்த வேண்டும்.

3. இப்பொழுது நல்லெண்ணை கொண்டு மூங்கில் குழாய்களின் உள்ளே தடவி கொள்ள வேண்டும்.

4. அதன் பின்னர் இக்கலவையை மூங்கில் குழாயினுள் முக்கால் பாகம் அளவு நிரப்ப வேண்டும்.

5.இப்பொழுது பலா இலைகளை அதன் வாய் பகுதியில் அடைத்து இரும்பு கம்பியை கொண்டு பலா இலைகள் அடைப்பு அவிழ்ந்து விடாதவாறு கட்டவேண்டும்.

6. பின்னர் தீயை மூட்ட வேண்டும், இத் தீ அடுப்பு கரியை கொண்டு அணல் தணல் பறக்க இருக்க வேண்டும்.

7. இப்பொழுது இந்த மூங்கில் குழாய் செட்களை அடுப்புல இட்டு அணல் தணல் பறக்க வேண்டும்.

8. நமக்கு கறி மசாலா வாடை வரும். இது வேகுவதற்கு சுமாராக 25 நிமிடங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.

9. நாம் கறி கொத்திய கத்தியை கொண்டு மூங்கிலை பிளந்தால் சுட சுட மூங்கில் சுட்ட கோழி ரெடி! !

எண்ணெய் இல்லாமல் செய்யும் முறையும் உள்ளது. இது ஆந்திராவிலும், மலைநாடுகளிலும் பிரபலமானது. இந்த முறையை கீழே உள்ள வீடியோவில் காணலாம். இதை ஜங்கில் சிக்கன் என்றும், தெலுங்கில் பொங்குலோ சிக்கன் என்றும் பெயர். இதே முறையில் மூங்கில் சிக்கன் பிரியாணியும் செய்யலாம். அந்த முறையை இரண்டாவது வீடியோவில் காணலாம்

தக்காளி குருமா

தக்காளி குருமா
அவசியமான பொருட்கள் :
வெங்காயம் - 1
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒருதேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி நறுக்கியது - கால் கப்
உப்பு
தாளிக்க:
பட்டை - ஒரு சிறு துண்டு
லவங்கம் - 2
பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய்
அரைக்க:
தேங்காய் - ஒரு மூடி
கசகசா - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரைத் தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறு துண்டு
லவங்கம் - 2
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
வெங்காயம் தக்காளியை நறுக்கி வைக்கவும்.
அரைக்க கொடுத்ததை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி ஆற வைத்து பின்பு 1 தக்காளி சேர்த்து நைசாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளிக்கவும். வெங்காயம் போட்டு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். உப்பு மற்றும் தூள் வகை எல்லாம் சேர்த்து குழைந்து வரும் வரை வதக்கவும்.
அரைத்ததை ஊற்றி தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும்.குருமா கெட்டியானதும் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
குறிப்பு:
தக்காளி நன்றாக பழுத்த இருந்தால் சுவை நன்றாக இருக்கும். கசகசா அரைக்கும் முன் அதை சுடுநீரில் ஊறவைத்தோ அல்லது வறுத்து அரைத்தால்லோ நன்கு மைய அரைப்படும்

இஞ்சி - பூண்டு சட்னி

அஜீரணத்தைப் போக்கும் இஞ்சி - பூண்டு சட்னி

தேவையான பொருள்கள்

இஞ்சி, பூண்டு - தலா ஒரு கிண்ணம்,
பச்சை மிளகாய் - 12,
புளி - எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - தேவையான அளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

1. பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

2. இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

3. கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு, அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும்.

4.சுருண்டு வரும்போது, இறக்கி வைக்கவும். கெடாமல் இருக்கும்.

5.இது பசியின்மை, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்குக் சிறந்த மருந்து.

நுங்கு சாலட்

கோடை வெயிலுக்கு நுங்கு சாலட்

தேவையான பொருட்கள்....

நுங்கு - 6
சுகர் லைட் (அ) தேன் - தேவையான அளவு
பால் - 2 கப் (நன்கு காய்ச்சி ஆரவைத்தது)
ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை....

• பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும்

• நுங்கின் தோலை நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் நுங்கை போட்டு அதில் பால், சுகர் லைட் (அ) தேன் சேர்க்கவும்.

• கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து ப்ரிஜ்ஜில் வைத்து 1 மணி நேரம் கழித்து சாப்பிட நன்றாக இருக்கும்.

• வெயிலுக்கு மிகவும் நன்றாக இருக்கும்.உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்.

ஆம்பூர்’ பிரியாணி

ஆம்பூர்’ பிரியாணி

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மாநிலம் கடந்தும்கூட பல ஊர்களின் போர்டில் பளபளக்கிறது... 'ஆம்பூர் பிரியாணி'! வேலூர் அருகே இருக்கும் இந்த ஆம்பூரின் பிரியாணிக்கு, டிரேட் மார்க் சுவையை வழங்குகிறது 'ஆம்பூர் ஸ்டார் பிரியாணி’ ஹோட்டல். நான்காவது தலைமுறையால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் ஸ்டார் பிரியாணி ஹோட்டலின் வயது, நூற்றுப் பதின்மூன்று. அதன் உரிமையாளர் மனிர் அகமது, ஆம்பூர் பிரியாணியின் ரெசிபியை நமக்காக இங்கே பகிர்கிறார்.

தேவையானவை:

சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ,
மட்டன் அல்லது சிக்கன்- ஒரு கிலோ,
பட்டை, லவங்கம் - தேவையான அளவு,
பூண்டு - 150 கிராம்,
இஞ்சி - 150 கிராம்,
காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - கால் கிலோ,
தக்காளி - 200 கிராம்,
கொத்தமல்லி, புதினா (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு,
தயிர் - 150 கிராம்,
எலுமிச்சம்பழம் - ஒன்று,
எண்ணெய் - 250 கிராம்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

⭕️ இஞ்சி, பூண்டு இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளுங்கள்.

⭕️ காய்ந்த மிளகாய்களை அது மூழ்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி ஐந்து நிமிடம் ஊறவிடுங்கள். அதன் பிறகு அந்த தண்ணீரோடு மிளகாயை மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் மிளகாய் பேஸ்ட் ரெடி.

⭕️ பொதுவாக சிக்கன் பத்து நிமிடத்தில் வெந்துவிடும், மட்டனாக இருந்தால் இளம் கறி, முற்றின கறி என இரண்டு வகை இருக்கிறது. அது வெந்துவிட்டதா என்பதை பார்த்து மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.

⭕️ அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும், பட்டை, லவங்கம் சேர்த்து அது நன்கு பொரிந்தவுடன் பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போகுமளவுக்கு வதக்குங்கள். இதனுடன் இஞ்சி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்குங்கள்.

⭕️ பிறகு, மட்டன் அல்லது சிக்கன், காய்ந்த மிளகாய் பேஸ்ட் 2 டீஸ்பூன் சேர்த்து, அது கறியோடு நன்கு ஒட்டிக் கொள்ளும் வரை வதக்குங்கள். கூடவே நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்கள்.

⭕️ பின்பு, நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி, புதினா சேர்த்து சுருள வதக்கி, இதில் தயிர், எலுமிச்சைச் சாறு மற்றும் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள் (மட்டனோ அல்லது சிக்கனோ 80 சதவிகிதம் வெந்தால் போதும்).

⭕️ சீரக சம்பா அரிசியை தண்ணீர் விட்டு அரைப்பதத்தில் வேகவைத்து (அதாவது 70 சதவிகிதம் வரை மட்டுமே வேக வேண்டும்) கொள்ளுங்கள்.

⭕️ இப்போது வாய் அகன்ற பாத்திரத்தில் வெந்த சாதத்தையும், வெந்த கிரேவியையும் சேர்த்து பதமாகக் கிளறி 'தம்’ போடவேண்டும். அதாவது, அடுப்பை 'சிம்’மில் வைத்து, பாத்திரத்தை அதன் மீதி வைத்து மூடிவிடுங்கள். அதன் மீது சுடு தண்ணீர் கொண்ட பாத்திரத்தை வைத்து மூடிவிடுங்கள்.

⭕️ ஒரு கிலோ அரிசிக்கு சுமார் 10 நிமிடம் 'தம்’ போட்டால் போதுமானது. இப்போது ஆம்பூர் பிரியாணி ரெடி.

இதை ஐந்து பேருக்கு தாராளமாக விருந்து வைக்கலாம்.

பின் குறிப்பு:

ஆம்பூர் பிரியாணியின் சீக்ரெட்டே காய்ந்த மிளகாய் பேஸ்ட்டில்தான் அடங்கியிருக்கிறது. சிலர் டேஸ்ட் கூட்ட முந்திரிபருப்பையும் அரைத்து சேர்ப்பார்கள்

மீல் மேக்கர் பக்கோடா

மீல் மேக்கர் பக்கோடா

தேவையான பொருட்கள் :

மீல் மேக்கர் 20 உருண்டைகள்
கடலைப் பருப்பு ஒரு கப்
சின்ன வெங்காயம் 10
பச்சை மிளகாய் 2
தேங்காய் துருவல் ஒரு மேஜைக்கரண்டி
மிளகாய்த் தூள் ஒரு தேக்கரண்டி
பிரெட் ஸ்லைஸ் 3
எலுமிச்சை சாறு ஒரு மேஜைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை சிறிதளவு
எண்ணெய், உப்பு தேவையான அளவு

செய்முறை:

1.மீல் மேக்கரை கொதி நீரில் போட்டு, ஐந்து நிமிடம் கழித்து அதை பிழிந்து, பின் பச்சை தண்ணீரில் அலசி, மிக்சியில் அடித்து உதிர்க்கவும்.

2. கடலை பருப்பை ஒரு விசில் வரும் வரை வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு விழுதை லேசாக வதக்கவும்.

3. பிறகு, மீல் மேக்கர், கடலைப் பருப்பு, உப்பு, பிரெட் ஸ்லைஸ், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி, மிக்சியில் அரைக்கவும்.

4.வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அரைத்த கலவையை கிள்ளிப் போட சூடான, சுவையான பக்கோடா ரெடி.

அசத்தலான மீன் வறுவல்

அசத்தலான மீன் வறுவல்

தேவையான பொருட்கள்:

கட்லா மீன் – 6 முதல் 8 துண்டுகள்
சின்ன வெங்காயம் – 15
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 2 அல்லது 3
பட்டை – ஒரு சிறிய துண்டு
கிராம்பு – 2
கொத்தமல்லி (தனியா) – 1 தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
மிளகு – 3 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் விதைகள் (சோம்பு) – ¼ தேக்கரண்டி
முட்டை -1
உப்பு சுவைகேற்ப‌

ஊறவைக்க தேவையான பொருட்கள்:

மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
உப்பு சுவைக்கேற்ப‌
எண்ணெய் பொறிக்க

செய்முறை:

1. வெங்காயம், பூண்டு, இஞ்சி, பட்டை, கிராம்பு, கொத்தமல்லி விதை, சீரகம், மிளகு, பெருஞ்சீரகம் விதைகள் இவற்றை தண்ணீர் சேர்க்காமல் மையமாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையோடு முட்டையையும் கலந்து வைக்கவும்.

2. மீனை நன்கு சுத்தமாக கழுவி நீரை சுத்தமாக வடித்துக் கொள்ளவும்.

3. மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு இவற்றை எல்லாம் கலந்து கொண்டு இதை மீனின் மீது நன்கு தடவவும்.

4. தடவிய கலவையுடன் மீனை சுமார் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

5. 30 நிமிடத்திற்கு பிறகு, படி 1 ல் அரைத்து தயாரித்த‌ மசாலாவை மீனில் தடவி மேலும் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். சூரிய ஒளியில் வைத்து சுண்ட காயவைக்க வேண்டும்.

6.. ஒரு வடசட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் (நான் ஸ்டிக் என்றால் நல்லது).

7. மசாலா தடவி ஊறவைத்த மீனை, இந்த வடை சட்டியில் போட்டு, மீனின் மீது எண்ணெயை 2 பக்கத்திலும் தெளிக்கவும்.

8. முதலில் நன்கு சூடாக்கி கொண்டு, பின் மிதமான தீயில் இந்த மீனை வேக வைக்கவும்.

9. மீனை இரண்டு புறமும் நன்கு பொன்னிறமாகும் வரை வேக வைத்து, வெளிப்புறம் முறுகலாகும் வரை வேக வைக்கவும்.

10. நன்கு நறுக்கிய வெங்காயம் மற்றும் எலுமிச்சையுடன் பரிமாறவும்.

11. நன்கு ருசியான & காரசாரமான மீன் வறுவல் தயார்.

பனீர் இனிப்பு போளி

பனீர் இனிப்பு போளி

தேவையான பொருட்கள் :

மைதா-ஒரு கோப்பை
கோதுமை மாவு-ஒரு கோப்பை
எண்ணெய்-இரண்டு தேக்கரண்டி
உப்புத்துள்- ஒரு சிட்டிகை
துருவிய பனீர்- முக்கால் கோப்பை
துருவிய தேங்காய்- அரைகோப்பை
வெல்லம்-1/2 கோப்பை
ஏலக்காய்-நான்கு
பொடித்த முந்திரி -காலக் கோப்பை
நெய்/எண்ணெய்- தேவைக்கேற்ப

செய்முறை :

1.மாவை ஒன்றாக கலந்து அதில் உப்பு மற்றும் எண்ணெயை ஊற்றி நீரைத் தெளித்து சப்பாத்திக்கு பிசைவதுப் போல் பிசைந்து குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

2.மிக்ஸியில் வெல்லதுடம் ஏலக்காயைச் சேர்த்து நன்கு பொடித்து வைக்கவும்

3.வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி அதில் துருவிய பன்னிரைப் போட்டு ஈரம் போக வறுத்து தனியே ஆற வைக்கவும் .

4.பின்பு அதே வாணலியில் தேங்காயை கொட்டி இளஞ் சிவப்பாக வறுத்து ஆறவைத்து அதையும் பன்னீரில் கொட்டி கலக்கவும்.

5.பின்பு அதில் பொடித்த சர்க்கரை மற்றும் முந்திரி பொடியையும் சேர்த்து நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும்.

6.பிறகு பிசைந்து வைத்த மாவிலிருந்து ஒரு எலுமிச்சையளவு உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வட்டமாக இட்டு அதன் நடுவில் சிறிது பூரணத்தை வைத்து மூடி இலேசாக அழுத்தி மீண்டும் தேய்த்து வைக்கவும்.

7.இவ்வாறு அனைத்து மாவையும் போளியாக இட்டு வைக்கவும்.

8. தோசை தவாவை அடுப்பில் வைத்து தயாரித்து வைத்துள்ள போளியைப் போட்டு இரண்டு புறமும் நெய்யை தடவி வேக வைத்து தீயாமல் சுட்டெடுக்கவும்.

திருப்பத்தூர் ஏஜிஎஸ் ஸ்பைசி ரெஸ்டாரண்ட் சிக்கன் ரோஸ்ட்

திருப்பத்தூர் ஏஜிஎஸ் ஸ்பைசி ரெஸ்டாரண்ட் சிக்கன் ரோஸ்ட்

தேவையான பொருட்கள் :

சிக்கனில் ஊறவைக்க‌

சிக்கன் -1/2 கிலோ
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு -3/4 டீஸ்பூன்

பொடிக்க‌

பிரியாணி இலை -1
பட்டை -சிறுதுண்டு
கிராம்பு- 4
ஏலக்காய் -3
சோம்பு + சீரகம் - தலா 1 டீஸ்பூன்

தொக்கு செய்ய‌

நல்லெண்ணெய் -5 டேபிள்ஸ்பூன்
வெண்ணை -1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய சின்ன வெங்கயம் - 25
நறுக்கிய பெரிய வெங்காயம்- 1
நறுக்கிய தக்காளி -1
கறிவேப்பிலை -2 கொத்து
இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -3 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள்- 1 டீஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த்தூள்- 4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

செய்முறை:

1.சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

2.பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடிக்கவும்.

3.பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பொடித்த பொடி+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

4.பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பொடித்த பொடி+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

5.வதங்கியதும் பெரிய வெங்காயம் +இஞ்சி பூண்டு விழுது+தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

6.தூள் வகைகள்+உப்பு சேர்த்து வதக்கிய பின் ஊறவைத்த சிக்கனை சேர்த்து நிறம் மாறும் வரை 5 நிமிடங்கள் வதக்கி 3/4 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.

7. வதங்கியதும் இடையில் வெண்ணெய் சுருள ஊற்றி சுண்ட கிண்டவும்.

8.கறி வெந்து எண்ணெய் பிரியும் வரை சுருள வதக்கி இறக்கவும்.

குறிப்பு :

1.இந்த தொக்கின் சுவையே குறைந்த தீயில் சமைப்பதுதான்.

2.நல்லெண்ணெயில் சமைப்பது சுவையை அதிகரிக்கும்.

3.அவரவர் சுவைக்கேற்ப காரத்தினை சேர்க்கவும்.

மட்டன் சுடுகறி குழம்பு

மட்டன் சுடுகறி குழம்பு

இந்த வகை குழம்பு கொங்கு பகுதியில் வசிக்கும் முதலியார் சமூகத்து மக்கள் வீட்டில் இவ்வகை உணவு மிகவும் பிரசித்தம். குறிப்பாக இவ்வகை உணவு பெருந்துறை, குன்னத்தூர், கோபிசெட்டிபாளையம், சீனாபுரம், பவானிசாகர், பண்ணாரி போன்ற ஊர்களில் இவ்வகை உணவு மிகவும் பிரபலம்.

தேவையான பொருட்கள் :

மட்டன் எலும்புடன் 1 கிலோ
வெங்காயம் அரை கிலோ
தக்காளி பெரிசு 3
பூண்டு 15 பல்
காஞ்சமிளகாய் 10 காரம் அதிகம் வேண்டுபவர்கள் அதிகம் சேர்த்துகோங்க
எண்ணை 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் சிறிது .
உப்பு தேவையான அளவு
பட்டை, லவங்கம், அன்னசிபூ சிறிதளவு .

செய்முறை :

1.மட்டனை நன்கு சுத்தம் பண்ணி முழ்கும் அளவு நீர் விட்டு மஞ்சள்தூள் உப்பு சேர்க்கவும் ..

2.பட்டை லவங்கம் அன்னசிபூ .. பாதியை சேர்க்கவும் .

3.காஞ்சமிளகாய் கிள்ளி விதை நிக்கிவிட்டு அதையும் சேர்க்கவும் .

4.வெங்காயம் சற்று பெரியதாக நறுக்கி சேர்க்கவும் .

5. பூண்டு தோல் உரித்து முழுவதாக சேர்க்கவும் ...

6.பின் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி வெக விடவும்.

7. கறி முக்கால்வாசி வெந்ததும் நீரை தனியே வடிகட்டி வைக்கவும் .

8. வேறு பாத்திரத்தை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்த உடன் மீதம் உள்ள பட்டை லவங்கம் அன்னசிபூ போட்டு வெடிக்க விட்டு .

9.பொடியாக நறுக்கிய தக்காளியை போடு வதக்கவும் .

10.தக்காளி சுருண்டு வந்தவுடன் வடிகட்டி வைத்த கறியை போட்டு வதக்கவும் .

11. தொடர்ந்து கிளறாமல் கொஞ்சம் பிடிக்க விட்டு ,பிடிக்க விட்டு ,வதக்கவும் .

12.சுடு வாசனை கொஞ்சம் குழம்பில் ஏறனும்.

13.வெங்கயம், பூண்டு ..இரண்டும் குழைந்து சுருண்டு வரும்போது வடித்த நீரை கறியில் சேர்த்து இரண்டு கொத்தி விட்டு இறக்கவும்

கார சட்னி

கார சட்னி

தேவையானவை:

தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
தக்காளி - 5 (பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 5 பல்
காய்ந்த மிளகாய் - 8
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயம், காய்ந்த மிளகாயைச் சேர்த்து நன்கு பொரிக்கவும் இதனுடன் தக்காளியைச் சேர்த்து சுருள‌ வதக்கிக் கொள்ளவும். இதில் தேங்காய்த்துருவல் மற்றும் பூண்டு சேர்த்து, நன்றாக வதக்கி அடுப்பை அணைக்கவும். கலவை ஆறியதும் சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்தவற்றைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கவும். இதை நீண்ட நேரம் வரை வெளியில் வைத்திருந்து சாப்பிடலாம். விருப்பம் உள்ளவர்கள் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கொள்ளவும்.

டஃப்டு குழிப்பனியாரம்

டஃப்டு குழிப்பனியாரம்

தேவையானவை:

பச்சரிசி - அரை கப்
புழுங்கல் அரிசி - ஒன்றரை கப்
உளுந்து - கால் கப்
அவல் - கால் கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு

பூரணம் செய்ய:

தேங்காய்த்துருவல் - அரை கப்
வெல்லம் - அரை கப்
நெய்யில் வறுத்த நட்ஸ் கலவை - கால் கப்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை :

அரிசி வகைகளுடன் அவல், உளுந்து மற்றும் வெந்தயத்தைச் சேர்த்து கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். மாவை வழித்தெடுத்து பாத்திரத்தில் உப்பு சேர்த்து கலக்கி, 6 மணி நேரம் புளிக்க விடவும். மாவு புளித்ததும், சிறிதளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தைப் பொடித்து 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு பிறகு வடிகட்டவும். இத்துடன் தேங்காய்த்துருவல், வறுத்த நட்ஸ், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கலவை கெட்டியாகும் வரை சூடாக்கிக் கிளறினால் பூரணம் தயார்.

பூரணம் ஆறியதும் குழிப்பனியாரப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, ஒவ்வொரு குழியிலும் தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு சூடானதும், கரைத்த மாவை குழியில் பாதியளவுக்கு ஊற்றவும். 2 நிமிடம் வேகவிடவும். பிறகு, சிறிதளவு பூரணத்தை எடுத்து மாவின் மேல் நிரப்பி, மீண்டும் கரைத்த மாவை ஊற்றி குழியை நிரப்பவும். பனியாரத்தை சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி வேக விட்டு எடுக்கவும்.

வெல்லத்தில் உள்ள இரும்புச் சத்து, நட்ஸ் வகைகளில் உள்ள புரோட்டின் சத்து உளுந்தில் உள்ள கால்சிய சத்து இவையெல்லாம் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உகந்தது.

புளி இல்லா கறி

புளி இல்லா கறி

காய்ச்சல் கண்டவர்கள் காய்ச்சலிருந்து மீண்டு வந்த பிறகு, நாவுக்கு எந்த சுவையும் தெரியாது. புளி இல்லா கறி, அவர்களின் நாவுக்கும் ஆரோக்கியத்துக்கும் நல்லது. அதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:

சின்ன வெங்காயம் - 10 (இரண்டாக நறுக்கவும்)
அவரைக்காய் - கால் கிலோ (மீடியம் சைஸில் நறுக்கவும்)
முருங்கைக்காய் - 1 (சின்ன துண்டுகளாக்கவும்)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பாசிப்பருப்பு - 200 கிராம்
பெருங்காயம் -
சிறு துண்டு (பொடிக்கவும்)
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

அரைக்க:
தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
சீரகம் - கால் டீஸ்பூன்
மிளகு - கால் டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 4 பல்

தாளிக்க:
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுந்து - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

அரைக்க வேண்டிய அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும். பாசிப்பருப்பை வாணலியில் லேசாக வறுத்து குக்கரில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழைய வேகவைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அவரைக்காய் மற்றும் முருங்கைக்காயைச் சேர்த்து மஞ்சள்தூள், வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், பெருங்காயம், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.

காய்கள் வெந்ததும் இதனுடன் வெந்த பாசிப்பருப்பு, மிக்ஸியில் அரைத்த மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைக்கவும். தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து கொதிக்கும் கலவையில் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி, இறக்கி பரிமாறவும்.

குறிப்பு:

இந்தக் குழம்பில் காய்கறிக்குப் பதில் வெறும் முருங்கை இலை சேர்த்தும் செய்யலாம்.

புதினா - காலிஃப்ளவர் மஞ்சூரியன்

புதினா - காலிஃப்ளவர் மஞ்சூரியன்

தேவையானவை:

நல்ல வெண்மையாக இருக்கும் காலிஃப்ளவர் - ஒன்று, புதினா - 2 கட்டு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சோள மாவு - 2 டீஸ்பூன், மைதா - முக்கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, சீரகம் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

காலிஃப்ளவரை சின்னச் சின்ன பூக்களாக எடுத்து... சிறிதளவு உப்பு கலந்த நீரில் போட்டு, 10 நிமிடம் வேகவைத்து நீரை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி - பூண்டு விழுது, சீரகத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கொஞ்சம் உப்பு, தேவையான நீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கலந்துகொள்ளவும். வேகவைத்த காலிஃப்ளவர் பூக்களை ஒவ்வொன்றாக இந்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகம், காய்ந்த மிளகாயை லேசாக வறுக்கவும். பொடிப் பொடியாக நறுக்கிய புதினா, பொரித்த காலிஃப்ளவர் பூக்கள் சேர்த்துக் கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாக நீர் தெளித்து வறுத்த காலிஃப்ளவர் மீது புதினா நன்றாக சேரும்படி கிளறவும். நீர் நன்கு வற்றிய பின் இறக்கவும்.

இது... சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும். சூடான சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

வேர்க்கடலைப்பொடி

வேர்க்கடலைப்பொடி
தேவையானவை: வேர்க்கடலை - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், கடலைப்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயம் - ஒரு கட்டி, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: முதலில் வெறும் வாணலியில் வேர்க்கடலையை வறுக்கவும். பிறகு எண்ணெயை ஊற்றி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த பருப்புகளை உப்பு கலந்து மிக்ஸியில் பொடிசெய்யவும். கடைசியாக, அதோடு வேர்க்கடலையையும் சேர்த்துப் பொடிக்கவும். காய்கறிகளைப் பொரியல் செய்யும்போது, இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் போட்டால் வித்தியாசமான டேஸ்ட்டில் ருசியாக இருக்கும்.

முடக்கத்தான்பொடி

முடக்கத்தான்பொடி
தேவையானவை: முடக்கத்தான் இலை - 2 கப், உளுத்தம்பருப்பு - கால் கப், துவரம்பருப்பு - கால் கப், கட்டிப் பெருங்காயம் - சிறு துண்டு, காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முடக்கத்தான் இலைகளை நன்றாக சுத்தம் செய்து ஈரம் போக காயவைக்கவும். வாணலியில் தலா கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பருப்புகளை தனியே வறுத்தெடுக்கவும். முடக்கத்தான் இலைகளையும் வெறும் வாணலியில் சிறிய தீயில் வைத்து நன்றாக வதக்கவும். ஆறியவுடன், முதலில் பருப்பு, உப்பு, மிளகாய் வகைகளை ஒன்றாகப் பொடித்து, கடைசியாக முடக்கத்தான் இலைகளையும் போட்டுப் பொடித்து எடுக்கவும். வாயுக் கோளாறுக்கு மிகச் சிறந்த நிவாரணி இந்தப் பொடி. சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம்.

பிரண்டைப்பொடி

பிரண்டைப்பொடி
தேவையானவை: நார் இல்லாத பிஞ்சு பிரண்டை தண்டுகள் - ஒரு கைப்பிடி அளவு, தேங்காய் - ஒரு மூடி, காய்ந்த மிளகாய் - 10, தனியா - ஒரு டீஸ்பூன், புளி - சிறு எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எள் - ஒரு டீஸ்பூன், வெல்லம் - சிறிது.
செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பிரண்டைத் துண்டுகளை நன்கு வறுக்க வேண்டும். தேங்காயைத் துருவி, பொன்னிறமாக வறுக்கவும். வெறும் வாணலியில் எள்ளை வறுக்கவும். காய்ந்த மிளகாய், தனியாவை தனித்தனியே வறுத்து, புளி சேர்த்து பிரண்டைத் துண்டுகளையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். பாதி அரைத்துக் கொண்டிருக்கும்போது தேங்காய் துருவல், உப்பு, வெல்லம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். இதை சாதத்தில் போட்டு, நெய் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். மூல நோய்க்கு உற்ற மருந்து. ஜீரண சக்திக்கும் சிறந்த உணவு.

ஐங்காயப்பொடி

ஐங்காயப்பொடி
தேவையானவை: வேப்பம் பூ - ஒரு டேபிள்ஸ்பூன், திப்பிலி - 6, சுண்டைக்காய் வற்றல் - ஒரு டேபிள்ஸ்பூன், மணத்தக்காளி வற்றல் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கல் உப்பு - தேவையான அளவு, துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, தனியா - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வெறும் வாணலியில் மேலே சொன்ன பொருட்களைப்போட்டு நன்கு வறுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். சுடு சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் ஐங்காயப் பொடியைப் போட்டு கலந்து சாப்பிடுங்கள். அமிர்தமாய் இருக்கும். வயிற்றுப் பொருமலை நீக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

கொத்துமல்லிப்பொடி

கொத்துமல்லிப்பொடி
தேவையானவை: கொத்துமல்லித் தழை (பெரிய கட்டு) - 1, கடலைப்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 10, பெருங்காயம் - சிறிதளவு, புளி - சிறிதளவு, உப்பு - தேவையானது.
செய்முறை: கொத்துமல்லி தழையை ஆய்ந்து, நீரில் கழுவி வடிய விடவும். பிறகு ஒரு பேப்பரை விரித்து தழையைப் பரப்பி நிழலில் வைக்கவும். 2, 3 நாட்களில் நன்றாக காய்ந்து விடும். மூன்றாவது நாள், வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். சூடான வாணலியில் காய்ந்த கொத்துமல்லித் தழையைப்போட்டு ஒரு புரட்டு புரட்டவும். புளியை நன்றாக மொரமொரப்பாக எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும். முதலில் கொத்துமல்லித் தழை, புளியைப் போட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும். அதை எடுத்துக்கொண்டு பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கொத்துமல்லி அரைத்ததையும் பொடியையும் அதில் போட்டு ஒரு சுற்று ஓடவிட்டு எடுக்கவும். சாதம், இட்லி, தோசை என எதற்கு வேண்டுமானாலும் ஈடு கொடுக்கும் இந்த கொத்துமல்லிப் பொடி.

ஓமம் உப்புப் பொடி

ஓமம் உப்புப் பொடி
தேவையானவை: ஓமம் - அரை கப், எருமை தயிர் - ஒரு கப், கல் உப்பு - அரை கப்.
செய்முறை: ஓமத்தை சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி, சுத்தம் செய்த ஓமம், கல் உப்பு சேர்த்து கலந்து 24 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஓமத்தை வடிகட்டி எடுத்து உலர்த்தவும். நன்றாக உலர்ந்த பின்னர் எடுத்து, மிக்ஸியில் போட்டு நைஸாக பவுடர் போல அரைக்கவும். பாட்டிலில் போட்டு இறுக மூடி வைக்கவும். சரியான நேரத்தில் சாப்பிடவில்லை என்றால் வாயுக் கோளாறு ஏற்பட்டு விடும். இதற்கு சரியான மருத்துவம் ஓமம் உப்புப் பொடி. தேவைப்படும்போது ஒரு ஸ்பூன் ஓமம் உப்புப் பொடியை சாப்பிட்டு விட்டு, இளஞ்சூட்டில் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிக்கவும். அப்புறம் பாருங்கள். வாயுக் கோளாறு இருக்கும் இடம் தெரியாமல் பறந்து போய் விடும்.

தனியாப்பொடி

தனியாப்பொடி
தேவையானவை: தனியா - அரை கப், உளுத்தம்பருப்பு - கால் கப், கடலைப்பருப்பு - கால் கப், துவரம்பருப்பு - கால் கப், பெருங்காயம் - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 10, மிளகு - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக வறுத்து, உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும். தனியாப் பொடியை சாதத்தோடு கலந்து உண்ண சுவையாகவும், மணமாகவும் இருக்கும். பித்தத்துக்கு மிகவும் நல்லது.

கரம்மசாலாப்பொடி

கரம்மசாலாப்பொடி
தேவையானவை: தனியா - அரை கப், பட்டை - 2 துண்டு, கிராம்பு - 10, ஏலக்காய் - 10, சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கசகசா - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, மராட்டி மொக்கு - 2 அல்லது 3, சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை - 2.
செய்முறை: மேற்கூறிய பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து, ஒன்றாக சேர்த்து அரைத்து, பொடிக்கண் உள்ள சல்லடையில் சலித்து வைத்துக்கொள்ளவும். இத்தூளை வாசனை போகாதபடி உடனடியாக பத்திரப்படுத்த வேண்டும்.

வற்றல்குழம்புப்பொடி

வற்றல்குழம்புப்பொடி
தேவையானவை: தனியா - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - அரை கிலோ, கடலைப்-பருப்பு - கால் கப், உளுத்தம்-பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - 2 டேபிள்ஸ்பூன், மிளகு - கால் கப், சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன், வேர்க்-கடலை - ஒரு டேபிள்-ஸ்பூன்.
செய்முறை: ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே வறுக்கவும். பிறகு எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து எடுத்து உப-யோகிக்கவும். வற்றல்குழம்பு, கெட்டிக் குழம்புக்கு போட்டால் சுவை பிரமாத-மாக இருக்கும். குழம்பு கொதிக்கும் சமயம் வேர்க்-கடலையை வறுத்துப் போட்டாலும் தனி ருசி தரும்.

கறிப்பொடி

கறிப்பொடி
தேவையானவை: மிளகு - அரை கப், சீரகம் - கால் கப், தனியா - அரை கப், மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு கட்டி, கடலைப்பருப்பு - அரை கப், உளுத்தம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 8 அல்லது 9.
செய்முறை: காய்ந்த மிளகாயைத் தவிர மற்ற பொருட்களை தனித்தனியே வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை வெயிலில் காய வைத்து, பின் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். காலை நேர அவசரத்தில், பொரியல் போன்றவற்றுக்குப் போட மிகவும் உதவும்.